

கூட்டணி முறிவு
மராட்டியத்தில் கடந்த தேர்தலை பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணியாக சந்தித்தன. இந்த தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான தொகுதிகளை விட அதிகமாகவே இந்த கூட்டணி கைப்பற்றியபோதும் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியால் கூட்டணி முறிந்தது. சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில் வரும் 30-ந் தேதி நாந்தெட் மாவட்டத்தில் உள்ள தெக்லுர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முன்னாள் மந்திரி பபன்ராவ் லோனிகர் பேசியதாவது:-
மாயம் நடக்கும்
மராட்டியத்தில் தற்போது நடக்கும் அரசில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால், மக்கள் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். இதனால் நீங்கள் நினைக்கும் மாயம்(மாற்றம்) மாநிலத்தில் நடக்கும். சிவசேனா கட்சியின் 12 எம்.எல்.ஏ.க்கள் தற்போது பா.ஜனதாவுடன் தொடர்பில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல பிரசாரத்தில் ஆசிஷ் செலார் பேசுகையில், இந்த தேர்தல் பண பலத்திற்கும், மக்கள் பலத்திற்கும் எதிரான போராட்டம் என்றார்.
பகல் கனவு
இந்த நிலையில் லோனிகரின் இந்த கருத்து குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் மனிஷா கயாண்டே கூறுகையில், அவரது கூற்றில் எந்த உண்மையும் இல்லை. பா.ஜனதா மராட்டியத்தில் ஆட்சிக்கு வருவதற்கு பகல் கனவு காண்கிறது. 12 மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் 80-க்கும் மேற்பட்ட இடங்களை அவர்கள் இழந்தபிறகும் அவர்கள் பகல் கனவு காண்கின்றனர் என்றார்.