மங்களூருவில் 12.26 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; கேரளாவை சேர்ந்த 11 கல்லூரி மாணவர்கள் கைது

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.2.45 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மங்களூருவில் போதைப்பொருள் விநியோகம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மங்களூரு தெற்கு போலீசார், அங்குள்ள அட்டவார் என்ற பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தியபோது, சுமார் 12.26 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மங்களூருவில் தங்கியிருந்து 2-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த போதைப்பொருளை அவர்கள் விற்பனை செய்ய முயன்று வந்ததாக கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.2.45 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






