

புதுடெல்லி,
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் கமிஷனில் நடைபெறும் விசாரணைக்காக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில் 12,600 பிரமாண பத்திரங்களை மனோஜ்பாண்டியன் நேற்று தாக்கல் செய்தார்.
இரட்டை இலை முடக்கம்
ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரு அணியினரும் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்தனர். தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷனர்கள் இரு தரப்பினரையும் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கி வைப்பதாக அறிவித்தனர். சசிகலா அணிக்கு அ.தி.மு.க.(அம்மா) என்ற பெயரையும், தொப்பி சின்னத்தையும் தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரையும், இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்தையும் ஒதுக்கியது.
காலஅவகாசம்
இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது பற்றி முடிவு எடுக்க இருதரப்பினரும் தங்களிடம் உள்ள மற்ற ஆதாரங்களை தேர்தல் கமிஷனிடம் ஏப்ரல் 17ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி கூறியது. இரு அணியின் சார்பிலும் ஆதாரங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் கமிஷன் இருதரப்பினருக்கும் ஜூலை 16ந் தேதிவரை அவகாசம் வழங்கியது. தேர்தல் கமிஷன் இறுதி முடிவு எடுக்கும் வரை இருதரப்பினருக்கும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கிடையாது என்றும் தேர்தல் கமிஷன் கூறியது.
12,600 பிரமாண பத்திரங்கள்
இந்நிலையில் அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) அணியை சேர்ந்த முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் நேற்று தங்களுக்கு ஆதரவான 12,600 பிரமாண பத்திரங்களை தேர்தல் கமிஷனில் ஒப்படைத்தார்.
பின்னர் இதுகுறித்து தினத்தந்தி செய்தியாளரிடம் மனோஜ்பாண்டியன் கூறியதாவது:
முன்னாள் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள அணி தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபிக்கும் வகையில் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷனில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவை பிரமாண பத்திரங்கள் மூலம் தாக்கல் செய்து நிரூபித்து வருகிறோம்.
இன்னும் தாக்கல் செய்வோம்
ஏற்கனவே 43 லட்சம் உறுப்பினர்களின் ஆதரவு எங்கள் அணிக்கு உள்ளது என்பதற்கான பிரமாண பத்திரங்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்திருக்கிறோம். தற்போது 12,600 பிரமாண பத்திரங்கள் மூலமாக மேலும் கட்சியின் 10 லட்சம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவை தேர்தல் கமிஷன் முன்பு நிரூபிக்கும் வகையில் இப்போது தாக்கல் செய்துள்ளோம்.
ஜூலை 16ந் தேதிக்குள் இன்னும் கூடுதலாக பல லட்சக்கணக்கான கையெழுத்துகள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்வோம்.
இவ்வாறு மனோஜ் பாண்டியன் கூறினார்.