ஒரே ஆண்டில் நாட்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை: வேலை இல்லாதோர் தற்கொலை அதிகரிப்பு

இந்தியாவில் 2018-ம் ஆண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளைவிட, வேலை இல்லாதவர்கள் தற்கொலை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.
ஒரே ஆண்டில் நாட்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை: வேலை இல்லாதோர் தற்கொலை அதிகரிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துவிட்டதாக பரவலாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் அதற்கு மாறான தகவல் வெளியாகி உள்ளது. 2018-ம் ஆண்டில் நடைபெற்றுள்ள குற்றங்கள் தொடர்பான அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒட்டுமொத்தமாக 2018-ம் ஆண்டில் ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 516 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2017-ம் ஆண்டைவிட 3.6 சதவீதம் அதிகம்.

இதில் மராட்டிய மாநிலம் முதலிடத்திலும் (17,972 பேர்), தமிழ்நாடு 2-ம் இடத்திலும் (13,896 பேர்), மேற்குவங்காளம் 3-ம் இடத்திலும் (13,225 பேர்), மத்தியபிரதேசம் 4-ம் இடத்திலும் (11,775 பேர்), கர்நாடகம் 5-ம் இடத்திலும் (11,561 பேர்) உள்ளது. இந்த 5 மாநிலங்களிலேயே நாட்டின் பாதி தற்கொலைகள் (50.9 சதவீதம்) நடைபெற்றுள்ளது.

2018-ம் ஆண்டு சராசரியாக தினமும் வேலை இல்லாதவர்கள் 35 பேரும், சுயதொழில் செய்வோர் 36 பேரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர். அந்த ஆண்டில் வேலை இல்லாதவர்கள் 12,936 பேரும் (9.6 சதவீதம்), சுயதொழில் செய்வோர் 13,149 பேரும் (9.8 சதவீதம்) தற்கொலை செய்துள்ளனர்.

விவசாய துறையில் 10,349 பேர் (7.7 சதவீதம்) தற்கொலை செய்துள்ளனர். இதில் 5,763 பேர் விவசாயிகள், 4,586 பேர் விவசாய தொழிலாளர்கள். தற்கொலை செய்த விவசாயிகளில் பெண்கள் 306 பேர், விவசாய தொழிலாளர்களில் பெண்கள் 515 பேர்.

தற்கொலை செய்த பெண்கள் 42,391, இதில் 22,937 பேர் (54.1 சதவீதம்) குடும்பத் தலைவிகள். அரசு ஊழியர்கள் 1,707 பேர் (1.3 சதவீதம்), தனியார் நிறுவன ஊழியர்கள் 8,246 பேர் (6.1 சதவீதம்), பொதுத்துறை ஊழியர்கள் 2,022 பேர் (1.5 சதவீதம்), மாணவர்கள் 10,159 பேர் (7.6 சதவீதம்) தற்கொலை செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, தற்கொலைகள் தீவிரமான பொது சுகாதார பிரச்சினை. ஆனால் இவை சரியான நேரத்தில் சாட்சிகள் அடிப்படையிலும், குறைந்தபட்ச தலையீடுகள் மூலமும் தடுக்கப்படக் கூடியவைதான் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com