குடகில் 144 தடை உத்தரவு அமல்

குடகில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதால் அதை தடுக்க நாளை(புதன்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி அதிகாலை வரை 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
குடகில் 144 தடை உத்தரவு அமல்
Published on

குடகு:

குடகில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதால் அதை தடுக்க நாளை(புதன்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி அதிகாலை வரை 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

வீரசாவர்க்கர் பேனர் விவகாரம்

சிவமொக்காவில் சுதந்திர தின பவள விழாவையொட்டி வீரசாவர்க்கரின் படத்துடன் கூடிய பேனர்களை சிலர் கிழித்து அகற்றினர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவருமான சித்தராமையா, முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் ஏன் வீரசாவர்க்கர் படத்தை வைத்தீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பா.ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

முட்டை வீச்சு

இந்த நிலையில், குடகு மாவட்டம் மடிகேரியில் மழை பாதித்த இடங்களை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த 18-ந் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது வீரசாவர்க்கர் பட விவகாரத்தில் சித்தராமையா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது வருகையை கண்டித்தும் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். 'கோ பேக்' சித்தராமையா என்று கருப்பு கொடி காண்பித்து போராடினர்.

இந்த போராட்டத்திற்கு மத்தியில் சித்தராமையா மடிகேரிக்கு சென்றார். அப்போது திதிமதி என்ற பகுதியில் பா.ஜனதா தொண்டர்கள் சித்தராமையாவின் கார் மீது முட்டை மற்றும் கருப்பு கொடிகளை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த முட்டை வீச்சு சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் தரப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் 2 தரப்பினரிடையே மோதலாக மாறியது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தரப்பில் மடிகேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர்.

அதில் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசிய சோமவார்பேட்டையை சேர்ந்த சம்பத்தும் ஒருவர். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

காங்கிரஸ், பா.ஜனதா போராட்டம்

இந்நிலையில் முட்டை வீச்சு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை பணி இடமாற்றம் செய்ய கோரியும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டம் வருகிற 26-ந் தேதி குடகு மாவட்டம் மடிகேரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதே போல பா.ஜனதா தரப்பினரும் காங்கிரசிற்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். ஒரே நேரத்தில் இரண்டு போராட்டங்கள் நடைபெற்றால் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்று போலீசார் கருதினர்.

இதனால் குடகு மாவட்டத்தில் 4 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

144 தடை உத்தரவு அமல்

இது குறித்து அவர் கூறியதாவது:-

குடகு மாவட்டம் மடிகேரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. 26-ந் தேதி போராட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதே போல பா.ஜனதா சார்பில் மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனால் குடகு மாவட்டத்தில் நாளை தொடங்கி, 27-ந் தேதி அதிகாலை வரை 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற கூடாது. மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மதுபானம் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் குடகு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் ஐ.ஜி. ஆலோசனை

இதற்கிடையில் குடகு மாவட்டத்திற்கு சென்ற போலீஸ் ஐ.ஜி. பிரவீன் மதுகர் பவர், போலீஸ் சூப்பிரண்டு உள்பட உயர் போலீசார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே மடிகேரியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட இருந்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இருப்பினும் குடகு மாவட்டம் குஷால்நகர், பொன்னம்பேட்டை, விராஜ்பேட்டை, மடிகேரி, சோமவார்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com