144 தடை உத்தரவு; ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு: கார்கே

எதிர்க்கட்சிகள் பேரணிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
144 தடை உத்தரவு; ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு: கார்கே
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின் 3-வது நாளான இன்றும் இரு அவைகளிலும் ஏற்பட்ட எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், அதானி விவகாரம் குறித்து விசாரிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணியாக செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் பேரணியை தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆனாலும், தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி மேற்கொள்ள திட்டமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், பேரணியாக சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களை விஜய் சவுக் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதுபற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, ஒருபுறம், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என பா.ஜ.க.வினர் பேசி வருகின்றனர்.

ஆனால் மறுபுறம், வெளிப்படையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மேற்கொள்ள இருந்த அமைதி பேரணியை அவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். அமலாக்க துறை அலுவலகத்தில் மனு ஒன்றை அளிக்க விடாமல் எங்களை தடுத்து நிறுத்தியது தவறானது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம்.

அமைதியாக சென்று, மனு கொடுத்து விட்டு திரும்பி வரவே நாங்கள் விரும்பினோம். எங்களை அனுமதித்து இருக்க வேண்டும். அமலாக்க துறை எங்கள் பேச்சை கேட்க கூட மறுத்து விட்டனர். அரசும் எங்களை தடுத்து நிறுத்தி உள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என கூறுகிறவர்கள் தேச விரோதிகள் என அழைக்கப்படுகின்றனர்.

ஆனால், ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டை நாம் அனைவரும் இன்று காண்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com