

புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த நீண்டகால போர் முடிவுக்கு வந்து, தலீபான் பயங்கரவாதிகளின் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
இதனை முன்னிட்டு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆகஸ்டு 14ந்தேதி முதல் நேற்றுவரை 13 ஆயிரம் பேரை அமெரிக்க அரசு மீட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய விமான படையை சேர்ந்த சி-17 ரக விமானம் ஒன்று ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து 107 இந்தியர்கள் உள்பட 168 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று காசியாபாத் நகரில் உள்ள ஹிண்டன் இந்திய விமான படை தளத்தில் வந்து இறங்கியது. விமான பயணிகள், கொரோனா பாதிப்புக்கான ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள அழைத்து செல்லப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் இருந்து 146 இந்தியர்கள் விமானம் வழியே டெல்லிக்கு இன்று வந்தடைந்து உள்ளனர்.
இதுபற்றி சுனில் என்ற பயணி கூறும்போது, கடந்த 14ந்தேதி நாங்கள் புறப்பட்டோம். அமெரிக்க தூதரக விமானம் எங்களை கத்தாருக்கு அழைத்து சென்று ராணுவ தளத்தில் தங்க வைத்தது. பின்பு அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்திய தூதரகத்திடம் தொடர்பு கொண்டு பேசினர். இதனையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை அழைத்து செல்ல வந்தனர் என்று கூறியுள்ளார்.