150 ஆண்டு கால வந்தே மாதரத்தின் கொண்டாட்டம்; சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணையாளர் பங்கேற்பு

1923-ம் ஆண்டில் ஓவியர் தேஜேந்திர குமார் மித்ரா வரைந்த ஓவியங்கள் காட்சிக்காக வைக்கப்படும்.
150 ஆண்டு கால வந்தே மாதரத்தின் கொண்டாட்டம்; சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணையாளர் பங்கேற்பு
Published on

புதுடெல்லி,

டெல்லி கடமை பாதையில் வருகிற 26-ந்தேதி குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் நாட்டின் 77-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதில் சிறப்பு என்னவெனில், நடப்பு ஆண்டில், வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கால கொண்டாட்டமும் நடைபெறுகிறது. ராணுவத்தின் வலிமை மற்றும் கலாசார பன்முக தன்மையின் வளமை ஆகியவற்றை பறைசாற்றுவதுடன் இந்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதுபற்றி பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் குறிப்பிடும்போது, இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என தெரிவித்து உள்ளார்.

அதனுடன் 1923-ம் ஆண்டில் ஓவியர் தேஜேந்திர குமார் மித்ரா வரைந்த ஓவியங்கள் காட்சிக்காக வைக்கப்படும். வரும் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை இந்திய ராணுவம், கடற்படை, விமான படை, கடலோர காவல் படை மற்றும் பிற மத்திய ஆயுத படைகள் இணைந்து வந்தே மாதரம் தொடர்பாக இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

சுதந்திரத்திற்கான மந்திரம் வந்தே மாதரம், வளத்திற்கான மந்திரம் சுயசார்பு இந்தியா என்ற கருத்துருக்களுடன் கூடிய அணிவகுப்பு வாகனங்களையும் இடம்பெற செய்ய திட்டமிடப்பட்டு உள்ளன. மத்திய அரசு சார்பில் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

விமான சாகச நிகழ்ச்சிகள், 2,500 கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும்.

குடியரசு தின விழாவையொட்டி, ராணுவ வீரர்கள் உள்ளிட்ட இந்திய ஆயுத படைகள் டெல்லி கடமை பாதையில் கடும் குளிருக்கு மத்தியில், பல நாட்களாக குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com