

நாடு முழுவதும் சுமார் 64 கோடி ரூபாய் அளவுக்கு சைபர் மோசடி நடப்பதற்கு மூலகாரணமாக இருந்த உ.பி. வாலிபரை குஜராத் போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ரோஹித் வீரேந்திரசிங் ஷாக்யா (வயது 18). 11-ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய இந்த வாலிபர், செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் உதவியோடு போலியான மொபைல் செயலிகளை (APK ஃபைல்கள்) உருவாக்கியுள்ளார். அதாவது, வங்கி மற்றும் அரசுத் துறைகளின் செயலிகளைப் போல தோற்றமளிக்கும் வகையில், மோசடியான ஆண்ட்ராய்டு APK ஃபைல்களை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சைபர் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களின் வங்கி விவரங்களைத் திருடி, அவர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட போலியான வங்கி பைலை உண்மையான பைல் என நம்பி, தனது மொபைலில் டவுன்லோடு செய்தபின், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்தை இழந்துள்ளார். இதுபற்றி உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொண்டு (1930) புகார் அளித்துள்ளார்.
அதன்அடிப்படையில் சூரத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். தொழில்நுட்ப ரீதியாக நடத்தப்பட்ட கண்காணிப்பில், போலி செயலியை உருவாக்கிய ஷாக்யா, கான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று சாக்யாவை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்கள், நெட்வொர்க் தொடர்புகளை அடையாளம் காண்பதற்காக, அந்த சாதனங்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. கைது செய்யப்பட்ட ஷாக்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஷாக்யா தனது ஏபிகே கோப்புகளை ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் சைபர் குற்றவாளிகளுக்கு வழங்கியதாகவும், சந்தேகத்திற்கு இடமில்லாத அப்பாவி மக்களைக் குறிவைக்க அவை பயன்படுத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரபலமான வங்கிச் சேவைகள், பணப் பரிவர்த்தனை மற்றும் அரசுச் சேவை செயலிகள் (apps) போலவே தோற்றமளிக்கும் 121 போலி ஏ.பி.கே. செயலிகளை உருவாக்கியிருக்கிறார் ஷாக்யா. பாதிக்கப்பட்டவர்களின் ஆண்ட்ராய்டு போன்களில் இவை இன்ஸ்டால் செய்யப்பட்டதும், அந்த செயலில் உள்ள தீங்கிழைக்கும் மால்வேர் மூலம், மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஓடிபி, வங்கிப் பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்டுகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட முக்கியத் தரவுகளை எளிதில் கைப்பற்றி மோசடியை அரங்கேற்றி உள்ளனர்.
மொத்தம் 21,672 செல்போன்களில் இந்த போலி செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்ததாகவும், இதன் வாயிலாக 54,000-க்கும் மேற்பட்ட மோசடியான வங்கிப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போலி செயலிகள் மூலம் சுமார் ரூ.64.38 கோடி அளவுக்கு பணத்தை சுருட்டியிருப்பதாகவும் மதிப்பிட்டுள்ளனர்.