வரும் டிசம்பர் இறுதிக்குள் 187.2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வினியோகிக்கப்படும்: மத்திய அரசு

நாட்டில் வரும் டிசம்பர் இறுதிக்குள் 187.2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வினியோகிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
வரும் டிசம்பர் இறுதிக்குள் 187.2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வினியோகிக்கப்படும்: மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதன்பின்னர் கடந்த ஏப்ரல் முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்த நிலையில், மே 1ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி, கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதேபோன்று, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கான நடைமுறைகளும் நடந்து வருகின்றன. தவிர, பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களுடனும் இந்தியா பேச்சுவார்த்தி நடத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், நாடு முழுவதும் இதுவரை 23 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசிகளை வழங்கும். வருகிற ஜூன் 21 முதல் மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கும். கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும். அடுத்த இரண்டு வாரங்களில் செயல்படுத்தப்படும் என கூறினார்.

இதுபற்றி அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இன்று கூறும்பொழுது, இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 187.2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வினியோகிப்பது உறுதிப்படுத்தப்படும். இது நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 94 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு போதிய அளவில் இருக்கும்.

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஜூலை மாதத்திற்குள் 53.6 கோடி கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவிடம் இருக்கும். இந்த வினியோகம் வருகிற ஆகஸ்டு முதல் டிசம்பர் மாதம் வரையில் 133.6 கோடியாக அதிகரிக்கப்படும்.

கொரோனா தடுப்பூசிகள் வினியோகத்தில் இன்னும் கூடுதலாக சில நிறுவனங்கள் இணையும். தற்போதுள்ள நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் என தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com