

புதுடெல்லி,
1984 - ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் சீக்கிய காவலர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சீக்கிய கலவரத்தின் போது டெல்லியில் ஐந்து பேரை கொன்றதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஜ்ஜன் குமார் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், விசாரணை நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டது.
இதற்கு எதிரான மேல் முறையீடு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம், சீக்கியர்கள் கலவர வழக்கில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என அறிவித்ததோடு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சஜ்ஜன் குமார் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.