

கோலார் தங்கவயல்
5 வயது சிறுவன்
கோலார்(மாவட்டம்) டவுன் பகுதியில் வசித்து வருபவர் லோகேஷ். விவசாயியான இவரது மகன் யஷ்மித் கவுடா(வயது 5). இந்த சிறுவன் கோலார் டவுன் தமக்கா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறான். நேற்று முன்தினம் யஷ்மித் கவுடா பள்ளி முடிந்ததும் வெளியில் வந்துள்ளாம்.
ஆனால், வீடு திரும்பவில்லை.
மகனை அழைத்துவர சென்ற தாய், யஷ்மித் கவுடா காணாமல் போனது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் தனது கணவர் லோகேசுக்கு தகவல் தெரிவித்தார்.
தனிப்படை அமைப்பு
பதற்றத்துடன் விரைந்து வந்த லோகேஷ் தனது மனைவியுடன் சென்று கோலார் புறநகர் போலீசில் புகார் அளித்தார். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணா தனிப்படை அமைத்து சிறுவனை மீட்க உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் டவுன் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் 2 பேர் சிறுவன் யஷ்மித் கவுடாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை அடையாளம் கண்டு போலீசார் அதன் விவரத்தை கண்டு பிடித்தனர்.
சிறுவனை அடைத்து வைத்தனர்
போலீசாரின் விசாரணையில் சிறுவனை மோட்டார் சைக்கிளில் கடத்தியவர்கள் சீனிவாசப்பூர் தாலுகாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் கோலாரில் இருந்து சிந்தாமணி மார்க்கமாக சீனிவாசப்பூருக்கு அவர்கள் சென்றதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் சீனிவாசப்பூர் டவுனில் உள்ள ஒரு வீட்டில் சிறுவனை அடைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் சீனிவாசப்பூருக்கு சென்று விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சிறுவன் யஷ்மித் கவுடாவையும் மீட்டனர். பின்னர் சிறுவனையும், கைதான 2 பேரையும் போலீசார் கோலாருக்கு அழைத்து வந்தனர்.
பணம் பறிக்கும் நோக்கத்தில்...
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு நாராயணா, சிறுவன் யஷ்மித் கவுடாவை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தார். அதையடுத்து கைதான 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் சிறுவனை கடத்தியவர்கள் சீனிவாசப்பூர் டவுன் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(வயது 35), மஞ்சு(32) ஆகியோர் என்பதும், பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர்கள் சிறுவனை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவன் கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு உள்ளான். மேலும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதையடுத்து சிறுவனை மீட்டு, குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணா பாராட்டு தெரிவித்துள்ளார். சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் நேற்று கோலாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.