

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம் தல்வாண்டி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஓட்டல் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், ஓட்டலில் நேற்று இரவு ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இருந்தனர். அப்போது, திடீரென அந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில், ஓட்டலில் இருந்த 15 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் இடிபாடுகளில் சிக்கிய 15 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்தவர்களில் ஆரியன் , லக்ஷ்மன் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.