ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச கியாஸ் சிலிண்டர்கள்: குஜராத் அரசு முடிவு

குஜராத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச கியாஸ் சிலிண்டர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச கியாஸ் சிலிண்டர்கள்: குஜராத் அரசு முடிவு
Published on

ஆமதாபாத்,

குஜராத்தில் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அவரது அரசில் கல்வி மந்திரியாக உள்ள ஜித்து வகானி இன்று கூறும்போது, குஜராத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச கியாஸ் சிலிண்டர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.

இதனால், குடிமகன்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 கோடி நிவாரணம் கிடைக்கும். 38 லட்சம் இல்லத்தரசிகளை மனதில் கொண்டு இந்நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இதனால், ரூ.1,700 கோடி பணம் ஒட்டுமொத்த பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளர்கள் இந்த பலனை அடைவார்கள் என கூறியுள்ளார். இதேபோன்று, சி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை வாயு மற்றும் பைப் வழியே கொண்டு செல்லப்படும் இயற்கை வாயு (பி.என்.ஜி.) ஆகியவற்றுக்கு 10 சதவீத வாட் வரியையும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த வரி குறைப்பினால், சி.என்.ஜி.யில் கிலோ ஒன்றுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரை மக்களுக்கு லாபம் கிடைக்கும். பி.என்.ஜி.யை எடுத்து கொண்டால், கிலோ ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.5.50 லாபம் கிடைக்கும். இது மக்களுக்கு அரசு அளிக்கும் தீபாவளி பரிசு என்றும் அவர் கூறியுள்ளார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 24 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் நிலையில், நடைபெற உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் இந்த முறை பா.ஜ.க. மற்றும் காங்கிரசுடன், ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் மோத தயார் நிலையில் உள்ளது.

இதன்படி, 5-வது வேட்பாளர் பட்டியலையும் ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது. குஜராத் தேர்தலுக்கு இதுவரை 53 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது. பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்ததுபோன்று, குஜராத்திலும் அதிகாரத்திற்கு வருவதற்கான வேலைகளில் ஆம் ஆத்மி ஈடுபட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com