லஞ்சம், முறைகேடு புகாரில் சிக்கிய 2 நீதிபதிகள் பணி நீக்கம் - மும்பை ஐகோர்ட்டு அதிரடி


லஞ்சம், முறைகேடு புகாரில் சிக்கிய 2 நீதிபதிகள் பணி நீக்கம் - மும்பை ஐகோர்ட்டு அதிரடி
x

மாவட்ட அளவிலான நீதிபதிகள் மீதான பணி நீக்க நடவடிக்கை மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

சத்தாரா மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு கூடுதல் நீதிபதியாக இருந்தவர் தனஞ்செய் நிகம். இவர் வழக்கு ஒன்றில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் தனஞ்செய் நிகம் முன்ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் முறையிட்டார். ஆனால் கடந்த மார்ச் மாதம் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சிவில் கோர்ட்டு நீதிபதியாக இருந்த இர்பான் சேக், வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை தவறாக பயன்படுத்தியது மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேற்கண்ட 2 நீதிபதிகள் மீதான புகார்களையும் மும்பை ஐகோர்ட்டு விசாரித்து வந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் 2 பேரையும் பணி நீக்கம் செய்து மும்பை ஐகோர்ட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்காக மாவட்ட அளவிலான நீதிபதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பணி நீக்க நடவடிக்கை மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story