

ராய்ச்சூர்,
கர்நாடகாவில் 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில், கரு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 2 மாத ஆண் குழந்தையின் வயிறு திடீரென வீங்கியது. மேலும், குழந்தை அவ்வப்போது வாந்தி எடுத்துள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் கட்டி போன்ற அமைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், அது கட்டி அல்ல; குழந்தையின் வயிற்றுக்குள் கரு இருக்கிறது என்று தெரிய வந்தது. இதுகுறித்து குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவராஜ் கூறியதாவது:-
கர்ப்ப காலத்தில் உருவாகும் இரட்டை கருக்களில் ஒன்று மட்டும் நன்றாக வளர்ச்சி அடையும். மற்றொரு கரு வளர்ச்சி அடையாமல், வளர்ந்த கருவின் உடலுக்குள் சிக்கிக்கொள்ளும். இந்த அரிய மருத்துவ நிலை, 'பீடஸ் இன் பீடு' (Fetus in Fetu) என அழைக்கப்படுகிறது.
50 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதுபோன்ற அபூர்வ நிலை ஏற்படுகிறது. இந்தியாவில் இதுவரை சுமார் 230 குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இது 3-வது நிகழ்வாகும். குழந்தைக்கு அவசர சிகிச்சையும் கூடுதல் மருத்துவப் பரிசோதனைகளும் தேவைப்படுவதால், பல்லாரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட மற்ற பரிசோதனைகளின் முடிவுகளுக்குப் பிறகே, அறுவை சிகிச்சை தேவையா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.