

அமராவதி
ஆந்திர பிரதேசத்தின் ராஜமுந்திரி பகுதியில் நரசபுரம் கிராமத்தில் வரலட்சுமி பால் பண்ணை என்ற பெயரில் அட்டல கணேஸ்வர ராவ் என்பவர் அங்கீகாரம் பெறாத வகையில், பால் பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் சப்ளை செய்த, அன்றாட அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான பாலில் கலப்படம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த கலப்பட பாலை குடித்ததில் நேற்று 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்தில் 106க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், ஆந்திரா, கிழக்கு கோதாவரியில் கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கலப்பட பால் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்ட விசாரணையில், கலப்பட பாலை குடித்தோரின் சிறுநீரகம் முதலில் செயலிழந்ததும், பிறகு சிறுநீர் தடைபட்டு உயிரிழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.
6 பேரும் வீடுகளுக்கே வந்து பால் விநியோகிக்கும் ஒரே வியாபாரியிடம்தான் பால் வாங்கி அருந்தியுள்ளனர். அந்த வியாபாரி 40 கால்நடைகளில் இருந்தும், உள்ளூர் கால்நடை விவசாயிகளிடமிருந்தும் பால் கொள்முதல் செய்து வீடுகளுக்கு விநியோகித்து வந்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பால் மாதிரியை சேகரித்து, பல்வேறு ஆய்வு கூடங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதேபோல், பல குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மருத்துவக் குழுக்கள் ஆய்வு நடத்தி வருகின்றன.
ஆந்திராவில் கலப்பட பால் குடித்து மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.