சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு; முழு பலம் பெற்றது

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் புதிதாக 2 நீதிபதிகளுக்கு இன்று பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு; முழு பலம் பெற்றது
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமுள்ள 34 நீதிபதிகள் பணியிடங்களில் 27 இடங்கள் வரை நிரப்பப்பட்டு இருந்தன. வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக காலியாக மீதம் உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந்தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவி உயர்வு அளித்து நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 5 நீதிபதிகளின் பெயர்களும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அது பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது. இதனையொட்டி கடந்த ஜனவரி 31-ந்தேதி கூடுதலாக 2 பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்தது.

இதன்படி, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஷ் பிண்டால் மற்றும் குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகிய இருவரது பெயர்களை பரிந்துரைத்து அவர்களை நியமிக்க கோரியிருந்தது.

இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் நியமன பரிந்துரைக்கு மத்திய அரசு கடந்த 4-ந்தேதி ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்த விசயத்தில் காலதாமதம் செய்வது ஏற்கத்தக்கதல்ல என சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

இதன்பின், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கினார்.

இதனை தொடர்ந்து, ஐகோர்ட்டின் தலைமை நீதிபதிகளாக பணியாற்றிய 3 பேர் உள்பட 5 நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6-ந்தேதி பதவியேற்று கொண்டனர். நீதிபதிகள் 5 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.

இதனால், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. மீதம் 2 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மீதமுள்ள 2 புதிய நீதிபதிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது பற்றி மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டார்.

நீதிபதிகள் ராஜேஷ் பிண்தால் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிப்பதற்கான ஒப்புதலை ஜனாதிபதி முர்மு வழங்கினார்.

இதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்தால் மற்றும் அரவிந்த் குமார் இன்று காலை பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.

நீதிபதி பிண்டால் வருகிற ஏப்ரல் மாதத்துடன் 62 வயது நிறைவு பெறுகிறது. இதனால், அவருக்கு 3 ஆண்டு பதவி காலம் மீதமுள்ளது. நீதிபதி அரவிந்த் குமாருக்கு வருகிற ஜூலையுடன் 61 வயது பூர்த்தியடைகிறது. ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உள்ளது. எனினும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 65 வயதுக்கு பின்னர் ஓய்வு பெறுகின்றனர்.

2 புதிய நீதிபதிகளின் நியமனத்தினால், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது. 9 மாத இடைவெளிக்கு பின்னர் முழு பலத்துடன் சுப்ரீம் கோர்ட்டு செயல்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com