

ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து மத்திய ரிசர்வ் படை போலீசாரும் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில், பஸ்தர் மாவட்டம் மர்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
போட்லி-மாலேவாகி கிராமங்களுக்கு இடையே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் திடீரென போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். சுதாரித்துக்கொண்ட போலீசார் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர். இருப்பினும் இந்த துப்பாக்கி சண்டையில் 2 போலீஸ்காரர்கள் பலியானார்கள்.
இதேபோல், மர்தூம் பகுதியில் நக்சலைட்டுகளின் கண்ணிவெடி தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.