

தானே,
மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள கல்யாண் ஆதார்வாடி சிறையில் இருக்கும் கைதிகளுக்கு அண்மையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்த நோயாளிகள் சிலர் பிவண்டி கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்காக அங்கு 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று முன்தினம் 2 கைதிகள் அதிகாலை 4.30 மணி அளவில் 15-வது மாடியில் உள்ள கழிவறைக்கு சென்றனர். இதன்பின் அவர்கள் திரும்பி வரவில்லை. இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று தேடிப்பார்த்த போது 2 கைதிகள் தப்பி சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் பணியில் அலட்சியமாக இருந்த 4 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தப்பி சென்ற கொரோனா பாதித்த 2 கைதிகளை பிடிக்க கோன்காவ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.