

தர்மசாலா,
இமாசலபிரதேசத்தின் தர்மசாலா கண்டோன்மென்ட் பகுதியில், ராணுவத்தின் சீக்கிய படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த படைப்பிரிவில் பணியாற்றும் ஜஸ்வீர் சிங் என்ற வீரரும் அங்கு வசித்து வந்தார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார்.
இவர் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்களான ஹர்தீப் சிங், ஹர்பால் சிங் ஆகியோரை சரமாரியாக சுட்டார். பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இதில் குண்டு பாய்ந்து 3 வீரர்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த ராணுவ உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 வீரர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்துக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கண்டோன்மென்ட் பகுதியில் அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் தர்மசாலாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.