

புதுடெல்லி,
இரட்டை ஆதாய பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எம்.எல்.ஏ.க்கள் 20 பேரது பதவியை பறிக்க கோரிய தேர்தல் கமிஷன் சிபாரிசுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அரியானா மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களிலும் இதுபோன்று இரட்டை ஆதாய பதவி விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. அரியானாவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் சட்டப்போராட்டத்திற்கு தன்னை தயார் படுத்தி வருகிறது.
இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் பாரதீய ஜனதாவின் மோசமான அரசியல் என ஆம் ஆத்மி விமர்சனம் செய்து உள்ளது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியா டெல்லி மக்களுக்கு வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் என்பது பாரதீய ஜனதாவின் மோசமான அரசியல் என விமர்சனம் செய்து உள்ளார். காவி கட்சிக்கு சரியான பதிலடியை பொதுமக்கள் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார். கடிதத்தை டுவிட்டரில் பகிர்ந்து உள்ள சிசோடியா, டெல்லி மக்களின் 20 தொகுதிகளுக்கு பாரதீய ஜனதா இடைத்தேர்தலை திணித்து உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டெல்லியில் வளர்ச்சி திட்டங்களை முடக்குவதற்காக இடையூறை பாரதீய ஜனதா திறன்பட செய்து வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கமானது அரசியலமைப்புக்கு விரோதமானது என குறிப்பிட்டு உள்ளார்.
இடைத்தேர்தல் மூலம் 20 தொகுதிகளில் உங்களின் (மக்களின்) பணம் வீணாக்கப்பட உள்ளது. இது பாரதீய ஜனதாவின் மோசமான அரசியல் இல்லையா? இது டெல்லியை தேர்தலை நோக்கி தள்ளுவது இல்லையா? இது டெல்லியில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வளர்ச்சி பணிகளை முடக்குவது சரியானதா? நீங்கள் தேர்வு செய்த எம்.எல்.ஏ.க்களை அரசியலமைப்புக்கு விரோதமாகவும், சட்டவிரோதமாகவும் தகுதி நீக்கம் செய்வது சரியானதா? நீங்கள் சரியான பதிலடியை கொடுப்பீர்கள் என நான் நம்புகிறேன், என சிசோடியா கூறிஉள்ளார்.