கெம்பேகவுடா குறித்த 20 இடங்களை ஒருங்கிணைத்து சுற்றுலா மண்டலம் உருவாக்கம்; மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு

பெங்களூருவை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கெம்பேகவுடா குறித்த 20 இடங்களை ஒருங்கிணைத்து சுற்றுலா மண்டலம் உருவாக்கப்படும் என்று உயர்கல்வி மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
கெம்பேகவுடா குறித்த 20 இடங்களை ஒருங்கிணைத்து சுற்றுலா மண்டலம் உருவாக்கம்; மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு
Published on

பெங்களூரு:

மண் சேகரிக்கும் பணி

பெங்களூரு சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேகவுடாவுக்கு 108 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி வருகிற 11-ந் தேதி திறந்து வைக்கிறார். இதையொட்டி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் புனித மண் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி பெங்களூரு அருகே மாகடி தாலுகா கெம்பாபுராவில் உள்ள கெம்பேகவுடாவின் சமாதியில் புனித மண் சேகரிக்கும் பணி நேற்று நடைபெற்றது.

இதற்காக பா.ஜனதா இளைஞர் அணியினர் பெங்களூரு லால்பாக் பூங்காவில் இருந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு கொண்டு வந்த புனித மண்ணை உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெற்று கொண்டார். அதன் பிறகு அங்கு நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:-

சுற்றுலா மண்டலம்

பெங்களூரு நகரை கெம்பேகவடா நிறுவினார். அவர் சமூகநீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டினார். அவர் நிறுவிய பெங்களூரு இன்று கர்நாடக மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. உலகின் முக்கியமான 30 நகரங்களில் பெங்களூரு 24-வது இடத்தில் உள்ளது. இந்த பெருமை நாட்டின் வேறு எந்த நகரத்திற்கும் கிடைக்கவில்லை.

2047-ம் ஆண்டுக்குள் பெங்களூரு அந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். கெம்பாபுரா கிராமத்தை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவை சுற்றியுள்ள ராமநகர், பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு நகர் மற்றும் துமகூரு ஆகிய மாவட்டங்களில் கெம்பேகவுடா குறித்த 20 இடங்கள் உள்ளன. அந்த இடங்களை ஒருங்கிணைத்து சுற்றுலா மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தேஜஸ்வி சூர்யா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com