

பாலக்காடு,
பாலக்காடு அருகே நகை கடையில் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி சுமார் 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பெரிங்கோட்டுக்குரிசியில், நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் போல உள்ளே நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல், நகைகளை பார்ப்பது போல் விற்பனையாளரிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஊழியர், உடனடியாக கடையின் மேலாளரை அழைத்துள்ளார். மேலாளர் அங்கு வந்ததும், சற்றும் எதிர்பாராத விதமாக அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியையும், மற்றொருவர் கத்தியையும் எடுத்து ஊழியர்களை மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்களை மிரட்டி, கடையில் இருந்த தங்க மோதிரங்கள் உள்ளிட்ட சுமார் 20 சவரன் தங்க நகைகளை அந்தக் கும்பல் கொள்ளையடித்துள்ளது. நகைகளை அள்ளிக்கொண்டு தப்பிக்க முயன்ற கொள்ளையர்களை கடை ஊழியர்கள் துணிச்சலாக தடுத்து நிறுத்தி, சத்தமிட்டு உதவி கோரியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிப்பதற்காக ஒருமுறை துப்பாக்கியால் சுட்டதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொட்டாயி போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கொள்ளையர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இந்த நகைக்கடை கேரளா - தமிழ்நாடு எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், குற்றவாளிகள் தமிழகத்திற்குள் தப்பி செல்வதை தடுக்க எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, குற்றவாளிகளைப் பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.