20 கோடி பார்வைகள்... பிரதமர் மோடியால் உலக புகழ் பெற்ற பகுரும்பா நடனம்

கூகுளில் பகுரும்பா நடனம் பற்றி கடந்த 2 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உலக அளவில் அதிகம் தேடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி அசாம் மாநிலத்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, கவுகாத்தி நகரில் சாருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பாரம்பரியமிக்க போடோ கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போடோ சமூகத்தின் பாரம்பரிய செறிவை கொண்டாடும் வகையில், 23 மாவட்டங்களை சேர்ந்த அந்த சமூகத்தின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று கூடி பகுரும்பா நடனம் ஆடினர்.
இயற்கையுடன் ஒன்றிணைந்து ஆடும், தனித்துவ நாட்டுப்புற நடனம் என்ற பெருமையை பகுரும்பா நடனம் பெற்றுள்ளது. மிக பெரிய கலாசார நிகழ்ச்சியான இதனை ஆண், பெண் என இரு தரப்பினரும் பட்டாம்பூச்சிகள், பறவைகள், இலைகள் மற்றும் பூக்களை போன்று பாவனைகள் செய்து ஆட்ட அசைவுகளை வெளிப்படுத்தினர்.
பொதுவாக அவர்கள் குழுக்களாக ஆடுவார்கள். வட்ட வடிவிலோ அல்லது நீண்ட வரிசையிலோ பார்வையாளர்களை கவரும் வகையில் நடனம் ஆடுவார்கள். அது அமைதி, வளம், மகிழ்ச்சி மற்றும் கூட்டு நல்லிணக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். இசையின் தன்மைக்கு ஏற்ப கைகளை பட்டாம்பூச்சிகளை போன்று அசைத்து ஆடுவது இதில் பிரபலம் வாய்ந்தது.
இந்த நடனம் உலக அளவில் கவரப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தகவலில், கடந்த 2 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கூகுளில் பகுரும்பா நடனம் பற்றி உலக அளவில் அதிகம் தேடப்பட்டு உள்ளதுடன், பிரதமர் மோடியின் சமூக ஊடகத்தில் மட்டுமே 20 கோடி பார்வைகளை பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






