

புதுச்சேரி,
புதுவை சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் காங்கிரஸ், தி.மு.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. காங்கிரஸ் 16 தொகுதியிலும், திமுக 14 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இதில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் உழவர்கரை தொகுதியை விடுதலை சிறுத்தை கட்சிக்கு அளிக்க உடன்பாடு ஏற்பட்டது.
இந்தநிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஏ. பி. விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.யும், தனது இல்லத்தில் காங்கிரஸ் சார்பில் விண்ணப்பங்களை வழங்கினார். இதற்கிடையே முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு கட்சியில் விண்ணப்பம் வழங்கப்படவில்லை.
இதையறிந்த நாராயணசாமி ஆதரவாளர்கள் நேற்று காலை 11 மணியளவில் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வைத்திலிங்கம் எம்.பி. வீட்டின் முன்பு திரண்டனர். அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திலிங்கம் எம்.பி.க்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
காங்கிரஸ் கட்சியை தி.மு.க.விடம் அடகு வைத்து விட்டதாகவும், தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி. அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது நாராயணசாமியின் ஆதரவாளர்கள் அவரை காருடன் வழிமறித்து போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், என்னால் திமுக-காங்கரஸ் கூட்டணி உடைய வேண்டாம்; தனி நபர்கள் முக்கியமில்லை, கட்சியே முக்கியம். 2026 தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.