

புதுடெல்லி,
2029 மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் தலைமுறையினரான ஜென்-சி மற்றும் ஜென் ஆல்பா பருவத்தினருக்கு (18 முதல் 26 வயதுடையவர்கள்) தேர்தல் நடைமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்காக 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நேரடியாகச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.
நாடு முழுவதும் 4 ஆயிரத்து 123 சட்டசபை தொகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களை இந்த முயற்சியில் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 15 லட்சம் பள்ளிகள், 70 ஆயிரம் கல்லூரிகள், 1,400 பல்கலைக்கழகங்களை அணுகி, மாணவர்களுக்கு ஜனநாயக மதிப்புகள், தேர்தல் நடைமுறை, வாக்காளர்களின் பங்கு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட உள்ளது.
இதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 10 தேர்தல் கல்விக் குழுக்கள் அமைத்து, மொத்தம் 50 ஆயிரம் குழுக்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. உண்மை யில், இதுபோன்ற தேர்தல் கல்விக் குழுக்கள் 2018-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டவை. தற்போது டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அவற்றை '2.0' என்ற வகையில் மேம்பட்ட வடிவில் புதுப்பித்து, மாணவர்களுடன் தொடர்ந்து இணைப்பு ஏற்படுத்தி தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.
18 முதல் 26 வயதுக்கு உட்பட்ட 14.78 கோடி ஜென் சி, ஜென் ஆல்பா தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வதை இலக்காக கொண்டு தேர்தல் கமிஷன் இந்தத் திட்டத்தை வகுத்துள்ளது.