

பரேலி,
உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஹடோலியா கிராமத்தில் வசித்து வந்தவர் ஷாருக் (வயது 20). இவர் வேலைக்காக துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு டெய்லராக வேலை செய்து வந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் ஷாருக் மற்றும் 3 பேர் நேற்றிரவு வெளியே சென்றுள்ளனர். அவர்களை 20 முதல் 25 பேர் கொண்ட கும்பல் ஒன்று, எருமையை திருடி சென்றனர் என்ற சந்தேகத்தில் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஷாருக் தவிர மற்ற 3 பேரும் தப்பியோடி விட்டனர்.
இதனால் அந்த கும்பலிடம் சிக்கிய ஷாருக் பலத்த காயம் அடைந்துள்ளார். அதன்பின் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.
இதனை அடுத்து ஷாருக்கின் சகோதரர் 20 முதல் 25 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் ஷாருக்கின் 3 கூட்டாளிகள் மீது புகார் அளித்துள்ளார். எருமை திருடு போன தரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.