

அகமதாபாத்,
குஜராத் மாநிலத்தின் வடக்கேயுள்ள பனஸ்கந்தா மாவட்டத்துக்குட்பட்ட அம்பாஜி-டன்ட்டா சாலை வழியாக சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான ஒரு சொகுசு பேருந்து திரிஷுல்யா காட் என்ற மலைப்பாங்கான இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது.
இன்று மாலை நடந்த இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 50 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், 'குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் விபத்து மிகுந்த மன வலியை தருகிறது. இந்த துயரமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன். காயம் அடைந்தவர்களுக்கு உள்ளூர் நிர்வாகத்தினர் போதிய உதவிகளை செய்து, அவர்களை நலமடையச் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். விபத்து செய்தியை அறிந்ததும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குஜராத் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அவரும் விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.