

புதுடெல்லி,
பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகம், உத்தரபிரதேசம், ஆந்திரா, மத்தியபிரதேசம், ஒடிசா, மராட்டியம், கேரளா, குஜராத், சத்தீஷ்கார், திரிபுரா, மணிப்பூர் ஆகிய 11 மாநிலங்களில் 6 லட்சத்து 28 ஆயிரத்து 488 வீடுகள் கட்ட மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 2 லட்சத்து 34 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. தமிழகத்தில் 20 ஆயிரத்து 794 வீடுகளும், ஆந்திராவில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 559 வீடுகளும், மத்தியபிரதேசத்தில் 74 ஆயிரத்து 631 வீடுகளும் கட்டப்பட உள்ளன.
இந்த தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட, மழை-வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு விதிமுறைகளை தளர்த்தி ரூ.486 கோடியே 87 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.