

புதுடெல்லி,
கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஆக்கிரமித்தது. இது பனி சூழ்ந்த மலை முகடுகளை கொண்ட பகுதி ஆகும். இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் சிப்பாய்களை எதிர்த்து தீவிரமாக போரிட்டனர். ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் நடைபெற்ற இந்த போர் சுமார் 3 மாதங்கள் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சிப்பாய்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.
இந்த போரில் பாகிஸ்தான் தரப்பில் ஏராளமான சிப்பாய்கள் பலி ஆனார்கள். இந்திய தரப்பில் 500-க்கும் அதிகமான வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஆபரேஷன் விஜய் போரில் வெற்றி பெற்றதாக 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ந் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. 21-வது கார்கில் போர் வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் சென்றிருந்த ராஜாங்க ராணுவ மந்திரி ஸ்ரீபாத நாயக், முப்படைகளின் தலைவர் பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதுரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறுகையில், கார்கில் போர் வெற்றி தினத்தை யொட்டி இந்திய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், நமது வீரர்கள் செய்த தியாகத்தால் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதாகவும், அவர்கள் செய்த தியாகம் ராணுவத்துக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்றும் கூறினார்.
கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அன்னையை பாதுகாக்க நடந்த கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்துக்கும் தேசம் நன்றிக்கடன்பட்டு இருப்பதாகவும், கார்கில் வெற்றி இந்திய ராணுவத்தின் உறுதி மற்றும் வீரத்தின் அடையாளமாக விளங்குவதாகவும் கூறி உள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 1999-ம் ஆண்டில் நாட்டை பாதுகாப்பதற்காக நடைபெற்ற போரில் உறுதியுடன் போராடி வெற்றி பெற்ற இந்திய ராணுவ வீரர்களின் தைரியத்தை நினைத்து பெருமை கொள்வதாகவும், இந்திய வீரர்களின் வீரம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்றும் கூறி இருக்கிறார்.