

திருவனந்தபுரம்,
கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிக எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கின. திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.
திருவனந்தபுரம் முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்று மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து டிசம்பர் 25-ம் தேதி, நடைபெற்ற மாவட்ட செயலகக் கூட்டத்தில் அவரை மேயராக்க சிபிஎம் முடிவு செய்தது.
இந்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆர்யா ராஜேந்திரன் இன்று திருவனந்தபுரத்தில் மேயராக பதவி ஏற்றார். இதனால் கேரளாவில் 21 வயதில் மேயர் பதவிக்கு தேர்வான இளம்பெண் என்ற பெருமையை ஆர்யா பெற்றுள்ளார். புதிய மேயருக்கு மாவட்ட ஆட்சியர் நவ்ஜோத் கோசா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.