

புதுடெல்லி,
வரும் கல்வி ஆண்டில், பல்கலைக்கழக மானியக்குழு 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை புதிய இணையதளம் ஒன்றில் இலவசமாக அளிக்கிறது. இந்த இணையதளம், தேசிய கல்விக்கொள்கையின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்டவை இந்த படிப்புகளில் அடங்கும். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் உயர்கல்வி சென்றடைவதற்காக இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் பல்கலைக்கழக மானியக்குழு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
அந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள 7 லட்சத்து 50 ஆயிரம் பொது சேவை மையங்கள் மூலம் இந்த படிப்புகளை மாணவர்கள் இலவசமாக பெறலாம். ஆனால், பொது சேவை மையங்களின் கட்டமைப்பை பயன்படுத்துவதால், அந்த மையங்களுக்கு மாதம் ரூ.500 செலுத்த வேண்டி இருக்கும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.