குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து பெண் டாக்டர் பலாத்காரம்.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்

சமூக ஊடகங்கள் மூலம் பழகிய 28 வயது பெண் டாக்டரை, இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புனே,
பெண் டாக்டர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சம்பவத்தின் தனிப்பட்ட வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த ஆனந்த் கட்டே (23) என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் பழகிய 28 வயது பெண் டாக்டரை, சதாராவில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்தார். அதனை வீடியோ பதிவும் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெண் டாக்டரை, அந்த இளைஞர் மிரட்டத் தொடங்கியதாகவும், தொடர்ந்து அந்த வீடியோவை காட்டி ஆசைக்கு இணங்குமாறும், இல்லாவிட்டால் அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு அந்த பெண் டாக்டர் மறுத்ததால், அவர் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெண் டாக்டர், போலீசாரை அணுகி அந்த இளைஞர் மீது புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆனந்த் கட்டே என்ற குற்றவாளி கார்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக மூத்த ஆய்வாளர் அஜய் காம்ப்ளே உறுதிப்படுத்தி உள்ளார்.






