

லக்னோ,
உத்தரபிரதேச மாநில மதரஸா வாரிய இணையதளத்தில் முழு விபரங்களை தெரிவிக்காத 2,300 மதரஸாக்கள் அரசின் அங்கீகாரத்தை இழக்கும் அபாய நிலையில் உள்ளன என அம்மாநில சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி லக்ஷ்மி நாராயண் சவுத்ரி கூறிஉள்ளார். முழு தகவல்களை தெரிவிக்காத மதரஸாக்களை போலியானவை என பட்டியலிட மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு லக்ஷ்மி நாராயண் சவுத்ரி அளித்து உள்ள பேட்டியில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் மொத்தம் 19,108 மதரஸாக்க உள்ளது, இந்த மதரஸாக்கள் மாநில மதரஸா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. இவைகளில் 16,808 மதரஸாக்கள் வாரிய இணையதளத்தில் முழு தகவல்களையும் தெரிவித்துவிட்டன, ஆவணங்களை சமர்பித்துவிட்டன. ஆனால் 2,300 மதரஸாக்களின் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இப்போது அந்த மதரஸாக்கள் எங்கு உள்ளது. நாங்கள் இந்த மதரஸாக்களை போலியானவை என கருதுகிறோம். ஜனவரி மாத முடிவில் இந்த மதரஸாக்கள் நடவடிக்கையை எதிர்க்கொள்ளும் என குறிப்பிட்டு உள்ளார்.
இருப்பினும் மதரஸாக்கள் விபரங்களை தெரிவிக்க இம்மாத இறுதி வரையில் கால அவகாசம் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டு உள்ளார் நாராயண் சவுத்ரி.
அரசு அங்கீகாரம் பெற்ற மதரஸாக்கள் தகவல்களை தெரிவிப்பில் ஏதேனும் சிக்கல்களை எதிர்க்கொண்டால் நேரடியாக அரசை நாடலாம். அவர்களுடைய பிரச்சனையை கூறலாம், நாங்கள் அதனை சரிசெய்வோம் எனவும் கூறிஉள்ளார்.