

புதுடெல்லி,
நாடு முழுவதும் ஏராளமான போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தைத்தொடர்ந்து இதுபற்றி பல்கலைக்கழக மானிய குழு தீவிர விசாரணை நடத்தியது. இதில் அங்கீகாரம் பெறாத 24 போலி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதை கண்டறிந்தது.
அந்த போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானிய குழு நேற்று வெளியிட்டது. மேலும் இந்த கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழ்கள் செல்லாது என்றும் அறிவித்து உள்ளது. டெல்லி, உத்தரபிரதேச மாநிலங்களில் தலா 8, மேற்கு வங்காளம், ஒடிசா தலா 2, பீகார், கர்நாடகா, மராட்டியம், புதுச்சேரி தலா 1, என மொத்தம் 24 போலி பல்கலைக்கழங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளன.
இதில், புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் ஸ்ரீபோதி அகாடமி ஆப் ஹையர் எஜூகேசன் என்ற கல்வி நிறுவனமும் இடம் பெற்று இருக்கிறது. மாணவர்கள் நலன் கருதி இந்த பட்டியல் வெளியிடப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்து உள்ளது.