சவால் விடுத்து 24 மணி நேரமாகிவிட்டது மோடிஜி - ராகுல் காந்தி

விவாதத்துக்கு நடுவராக மோகன் பகவத் உள்பட யாரை வேண்டுமானாலும் மோடி வைத்துக் கொள்ளலாம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சவால் விடுத்து 24 மணி நேரமாகிவிட்டது மோடிஜி
Published on: 

புதுடெல்லி,

எதிர்க்கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், பொய்களையும் வதந்திகளையும் பரப்பி நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.

சில சக்திகள் நாட்டைச் சீர்குலைக்க முயற்சி

மேலும், வெளிநாடுகளின் சவால்களுக்கு நாம் தீர்வு காண முயன்று வரும் வேளையில், நாட்டிற்குள்ளேயே சில சக்திகள் நாட்டைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பிரதமர் மோடி பேசிய கருத்துகளுக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, வெளிநாட்டு உதவி விவகாரத்தில் பகிரங்க விவாதத்திற்குச் சவால் விடுத்தார். இந்தநிலையில், சவால் விடுத்து 24 மணி நேரம் ஆகுது மோடிஜி என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

தேச விரோத சக்திகளுடன் தொடர்பு எனக்கூறும் பிரதமர் மோடி, அதுகுறித்து விவாதிக்கத் தயாரா?; சவால் விடுத்து 24 மணி நேரமாகிவிட்டது மோடிஜி, நீங்கள் தைரியமாக விவாதிக்க முன்வர வேண்டும் இந்த விவாதத்தை நாட்டில் எந்தவொரு இடத்திலும் மோடி வைத்துக் கொள்ளலாம். விவாதத்துக்கு நடுவராக மோகன் பகவத் உள்பட யாரை வேண்டுமானாலும் மோடி வைத்துக் கொள்ளலாம்.

விவாதத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கியக் கேள்விகள்

நாட்டின் நலன் சார்ந்த பல முக்கியமான கேள்விகள் குறித்து வெளிப்படையாக விவாதிப்போம்:

நாட்டின் நிதி அமைப்பு மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பான விவகாரங்கள்.

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் எவ்வாறு உருவானது?

அந்த ஒப்பந்தம் ஏன் இவ்வளவு அவசரமாக மேற்கொள்ளப்பட்டது?

ஏன் அமைச்சரவைக்குத் தெரிவிக்காமல் தனிப்பட்ட முறையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது?

அதானி வழக்கு ஏன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது?

எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பான கேள்விகள்.

வெளிநாட்டு சக்திகளுடனான தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுகள். இவை அனைத்தையும் மக்கள் முன்னிலையில் திறந்த விவாதமாக நடத்துவோம்.

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிக்கத் தயார்

என் மீது நீங்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்கள் அல்லவா? வாருங்கள், அனைத்தையும் விவாதிப்போம். அப்போது உண்மை எது, பொய் எது என்பது தெளிவாகிவிடும்.

மற்ற விவகாரங்களில் என் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனக்கு எதிராக சுமார் 45 அவதூறு வழக்குகள் இருப்பதாக நினைக்கிறேன்.ஆனால் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்த இந்த விவாதச் சவாலைப் பொறுத்தவரை, என் மீது ஏன் அவதூறு வழக்கு தொடரவில்லை? விரும்பினால் இந்த விவகாரத்திலும் வழக்குத் தொடருங்கள். அதையும் வெளிப்படையாக விவாதிப்போம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், மோடி அவர்களே

“பாலையும் தண்ணீரையும் பிரித்துக் காட்டுவோம். உண்மை எது என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்கட்டும். அனைத்தும் வெளிப்படையாகத் தெரியட்டும்.”

மோடி அவர்களே, நான் விடுத்த சவாலுக்கு 24 மணி நேரம் கடந்துவிட்டது. இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?விவாதத்திற்கு வாருங்கள். பயப்படாதீர்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், மோடி அவர்களே! என அதில் பதிவிட்டுள்ளார்.

X