

புதுடெல்லி,
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் கடந்த மாதம் 7-ந் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. தொடக்கத்தில், அது சரிவர இயங்கவில்லை என்று புகார்கள் வந்தன. அந்த குறைகளை சரிசெய்யுமாறு இணையதளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, இணையதளம் தற்போது சுமுகமாக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. அதன்படி, அதில் 25 லட்சத்து 82 ஆயிரத்து 175 வருமானவரி கணக்குகள் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 வாரங்களில் 3 கோடியே 57 லட்சத்து 47 ஆயிரத்து 303 பிரத்யேக லாகின் உருவாக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கக்கோரி, 69 லட்சத்து 45 ஆயிரத்து 539 கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த இணையதளம் மூலமாக 7 லட்சத்து 90 ஆயிரத்து 404 இ-பான் எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2 வாரங்களில், 2 லட்சத்து 92 ஆயிரத்து 601 மின்னணு கையெழுத்து சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக தினமும் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட கணக்குகள் தாக்கல் செய்யும் அளவுக்கு இணையதளம் வேகமெடுத்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.