மேகதாதுவில் புதிய அணையின் குறுக்கே நிலம் கையகப்படுத்தும் பணிக்கு 29 அதிகாரிகள் நியமனம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்காக 29 வனத்துறை அதிகாரிகளை நியமனம் செய்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேகதாதுவில் புதிய அணையின் குறுக்கே நிலம் கையகப்படுத்தும் பணிக்கு 29 அதிகாரிகள் நியமனம்
Published on

பெங்களூரு:-

மேகதாதுவில் அணை

காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கிடையில், காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணைகட்டும் நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்து வருகிறது. 13 ஆயிரம் ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த அணையை கட்ட ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு, 4.75 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் தேக்கி வைத்து, பெங்களூரு மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யவும், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் இந்த அணை கட்டப்பட இருப்பதாக கர்நாடக அரசு கூறி வருகிறது. அத்துடன் இந்த அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கயை கர்நாடக அரசு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை மந்திரிக்கு அனுப்பிவைத்துள்ளது.

ஆனால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் காவிரி தண்ணீரின் அளவு குறைந்து விடும். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதன் காரணமாக மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில்

தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணி

அதே நேரத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதால் வனநிலங்கள் அழிக்கப்படுவதுடன், வனவிலங்குகளும் பாதிக்கப்படும் என்பதால், இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இதுவரை அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் அரசும், துணை முதல்-மந்திரியான டி.கே.சிவக்குமாரும் தீவிரமாக இருந்து வருகின்றனர்.

ஏற்கனவே மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை வலியுறுத்தி கடந்த பா.ஜனதா ஆட்சியில், காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது. தற்போது மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்த பின்பு, முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறும் என்று அறிவித்திருந்தார். மேகதாதுவில் அணை கட்ட கடந்த பா.ஜனதா ஆட்சியில் பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கி அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

29 வனத்துறை அதிகாரிகள் நியமனம்

சுப்ரீம் கோர்ட்டில் மேகதாது அணைகட்டும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மகதாது அணை கட்டும் திட்டத்திற்காக எல்லைகளை அடையாளம் காணும் பணிகளை மேற்கொள்ள 29 வனத்துறை அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக வனத்துறை சார்பில் 29 துணை வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பல்வேறு வனச்சரகத்தில் பணியாற்றும் துணை அதிகாரிகள் 29 பேரை தேர்வு செய்து, அவர்களை நியமித்து, கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் அனில்குமார் ரதன் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது பெங்களூரு வனச்சரணாலயம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் தலா 5 பேர், பெங்களூரு வன ரோந்துப் படை, சாம்ராஜ்நகர் வனத்துறை, பிளிகிரி ரங்கநாத பெட்டா புலிகள் காப்பகத்தை சேதர்ந்த 4 பேர், மைசூரு மாவட்ட வனத்துறை, மாதேஸ்வரன் மலை வனவிலங்கு சரணாலயாத்தை சேர்ந்த தலா 3 பேர், காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் ஒருவர் என 29 துணை வன அதிகாரிகள் பணி நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வு நடத்தி அறிக்கை

இந்த 29 அதிகாரிகளும் மேகதாதுவில் அணைகட்டுவதற்காக எல்லைகளை அடையாளம் காணுவதுடன், எத்தனை மரங்களை வெட்ட வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்தி அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளனர்.

மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு மத்தியில் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல், எல்லைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளை கர்நாடக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com