வருமான வரிவிலக்கு உச்சவரம்பு 2 மடங்காக உயர்வு

வருமான வரிவிலக்கு உச்சவரம்பு 2 மடங்காக உயர்கிறது. ரூ.6½ லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் பெறுகிறவர்கள் இனி வருமான வரி செலுத்த தேவை இல்லை.
வருமான வரிவிலக்கு உச்சவரம்பு 2 மடங்காக உயர்வு
Published on

புதுடெல்லி,

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு 2 மடங்காக உயர்கிறது. ரூ.6 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் பெறுகிறவர்கள் இனி வருமான வரி செலுத்த தேவை இல்லை.

சமீப ஆண்டுகளாக வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சமாகவே நீடித்து வந்தது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்த்து ஏமாற்றத்தையே சந்திக்க வேண்டியதாயிற்று.

இந்தநிலையில், மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசின் இடைக்கால பட்ஜெட், மாத சம்பளதாரர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த முறையாவது, தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அந்த எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

இதுதொடர்பாக நிதி மந்திரி பியூஸ் கோயல் கூறும்போது, கடந்த 4 ஆண்டு கால பாரதீய ஜனதா ஆட்சியில் நிறைய வரி சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இதனால் வரி வருவாய் பெருகி இருக்கிறது. வரி சீர்திருத்தங்கள் மூலம் அரசு பெற்ற பலன்களை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த வரி செலுத்துவோருக்கு வழங்குவது நியாயம் ஆகிறது என குறிப்பிட்டு கீழ்க்கண்ட சலுகைகளை அறிவித்தார்.

* தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு, ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதாவது இரு மடங்காக உயர்கிறது.

மேலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, குறிப்பிட்ட சேமிப்புகள், காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்கிறபோது ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் உள்ளவர்கள்கூட வருமான வரி எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.

* மாத சம்பளதாரர்களுக்கான நிலையான கழிவு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் ரூ.4 ஆயிரத்து 700 கோடி வரிச்சலுகை கிடைக்கிறது. மேலும் 3 கோடி மாத சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் இதில் பலன் அடைய முடியும்.

* வங்கி டெபாசிட் வட்டி, அஞ்சலக டெபாசிட் வட்டி மூலம் வருகிற வட்டி கழிவு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்கிறது.

* 2 வீடுகளுக்கு இனி வீட்டுக்கடன் வட்டி சலுகை வழங்கப்படும்.

* வீட்டு வாடகை கழிவுக்கான உச்ச வரம்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்கிறது. இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2.40 லட்சம் வரை வாடகை பெறுபவர்களுக்கும் வரி இல்லை

வாடகை வருவாயாக ரூ.1.80 லட்சத்துக்கு மேல் பெறுபவர்கள் இப்போது வருமான வரி செலுத்த வேண்டும். இந்த உச்சவரம்பு ரூ.2.40 லட்சமாக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் டெபாசிட் செய்த தொகைக்கு கிடைக்கும் ரூ.10 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வருமான வரியில் இருந்து விலக்கு என்ற தொகையும் ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும் வகையில் வரி குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால பட்ஜெட் அல்ல, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான கருவி என்று நிதி மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com