

அகமதாபாத்,
மேற்காசிய போரின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த, இந்திய கொடியுடன் கூடிய 2 கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. அந்த இரண்டு கப்பலும் நேற்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது.
ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து வந்த நந்தா தேவி என்ற இந்திய கப்பல் இன்று அதிகாலையில் குஜராத்தை வந்தடைந்தது. அங்குள்ள வடினார் துறைமுகத்துக்கு எரிவாயு நிரப்பப்பட்ட கப்பல் வந்தது.
இதன் மூலம், இரண்டு நாட்களில் இந்தியாவிற்கு வந்தடையும் இரண்டாவது சரக்கு கப்பல் இதுவாகும்.
நந்தா தேவி கப்பலில் இருந்த எல்.பி.ஜி.யை எம்டி பிடபிள்யூ ப்ரீஸ் மற்றும் எம்டி ஜக் பிரதாப் ஆகிய இரண்டு தனித்தனி கப்பல்களில் மாற்றப்படும். இது பயண துரத்தை குறைத்து தமிழகத்திற்கு விரைவாக எல்.பி.ஜி. கிடைக்கும்.
மேற்காசியவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிராந்திய அதிகாரிகளுடனான தீவிர ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் இந்திய கடற்படையின் பாதுகாப்பு ஒருங்கிணைப்புடன் 'நந்தா தேவி' எல்.பி.ஜி. கப்பல் இந்தியா வந்தது. இன்னும் 22 இந்திய கொடி கொண்ட கப்பல்கள் வளைகுடா பகுதியில் உள்ளது.
நந்தா தேவியை தொடர்ந்து, இப்போது ஜக் லாட்கி கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சுமார் 81,000 டன் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.