பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பி.எஸ்.எப். வீரர்கள் பலி - 8 பேர் காயம்


பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பி.எஸ்.எப். வீரர்கள் பலி - 8 பேர் காயம்
x
தினத்தந்தி 11 March 2025 9:39 PM IST (Updated: 11 March 2025 10:07 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 3 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகி உள்ளனர்.

மணிப்பூர்,

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து அங்கு நடந்த வன்முறை சம்பவங்களால் மிகப்பெரிய அளவிலான கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறையில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி மணிப்பூரில் கணிசமான அளவில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் சேனாபதி மாவட்டத்தின் சாங்கோபுங் கிராமத்தில் சுமார் 15 எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பலியான 3 வீரர்களின் உடல்களும் சேனாபதி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மணிப்பூர் மாநில கவர்னர் அஜய் குமார் பல்லா, படுகாயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுவதாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story