

ராஜ்கோட்,
குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே உள்ள பிரன்ஸ்லா கிராமத்தில், ஆன்மீக தலைவரான சுவாமி தர்மபந்துஜி தலைமையில் மாபெரும் முகாம் ஒன்று நடைபெற்றது. ராஷ்ட்ர கத ஷிபிர் என்ற அமைப்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய முகாம்களை நடத்தி வருகிறது. புகழ்பெற்ற தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றும் இந்த முகாம் 10 நாட்கள் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி ஆகியோரும் இந்த முகாமில் கலந்து கொண்டு இருந்தனர்.
முகாமின் இறுதி நாளான இன்று, அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. முகாமில் பெண்கள் அமர்ந்து இருந்த பகுதியில் முதலில் ஏற்பட்ட தீ மளமளவென பிற பகுதிகளுக்கு பரவியது. இதனால், முகாமில் நிகழ்ச்சியை காண வந்திருந்தவர்கள் பீதியில் ஓடினர்.
இந்த தீ விபத்தில் பதின்ம வயது சிறுவர்கள் 3 பேர் பலியானது தெரியவந்துள்ளது. 15 பேர் காயம் அடைந்துள்ளனர். மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தீயை அணைக்கும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிகழ்விடத்துக்கு விரைந்துள்ளனர். #Gujarat | #FireAccident