பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி


பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி
x
தினத்தந்தி 29 Jun 2025 9:28 AM IST (Updated: 29 Jun 2025 11:53 AM IST)
t-max-icont-min-icon

ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றதாகும்.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டு ரத யாத்திரை நேற்று முன் தினம் தொடங்கியது. திருவிழா 9 நாட்கள் நடைபெறும்.

மூன்று தேர்களும் முதல்நாள் மாலையிலேயே ஸ்ரீ கண்டிச்சா கோவிலுக்கு செல்லவேண்டியது. ஆனால் பாலபத்திரர் தேர் ஒரு திருப்பத்தில் திரும்பும்போது நகர முடியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் பின்னால் வந்த மற்ற தேர்களும் நிறுத்தப்பட்டன.

பின்னர் நேற்று காலை மீண்டும் ரத யாத்திரை தொடங்கியது. 3 தேர்களும் ஸ்ரீ கண்டிச்சா கோவிலை சென்றடைந்தன. ரத யாத்திரையில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கண்டிச்சா கோவில் அருகில் தேர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதியில் குவிந்திருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்த பகுதியில், கோவிலுக்கு பொருட்களை ஏற்றி வந்த இரண்டு லாரிகள் வந்ததால் மேலும் நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

1 More update

Next Story