

இம்பால்,
மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் 2023ம் ஆண்டு நாகா, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் கொல்லப்பட்ட நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் வந்தது. பின்னர், ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டது.
அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநில முதல்-மந்திரியாக யும்னம் கேம்சந்த் சிங் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, அம்மாநிலத்தில் வன்முறை தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டபோதும் அவ்வப்போது மோதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். அம்மாநிலத்தின் கம்ஜோங் மாவட்டம் ஷெசத் கிராமத்தில் நேற்று இரவு நடந்த மோதலில் 22 வயது இளைஞர், 42 வயது பெண் என 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அதேபோல், உஹ்ரல் மாவட்டம் ஷபு யாலோன் கிராமத்தில் சந்தீப் ராய் (வயது 40) என்ற நபர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும், பல வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நேற்று ஒரேநாளில் மணிப்பூரில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.