ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் பலியான விவகாரம்; 2 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்


ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் பலியான விவகாரம்; 2 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 29 Jun 2025 3:05 PM IST (Updated: 29 Jun 2025 3:22 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியான விவகாரத்தில், பூரி டி.சி.பி. மற்றும் காவல் அதிகாரி அஜய் பதி ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பூரி,

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கடந்த வெள்ளி கிழமை தொடங்கி நடந்து வருகிறது. இதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

கடவுள்களான ஜெகந்நாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய 3 பேரும் புனித ரதத்தில் அமர வைக்கப்பட்டு திரளான பக்தர்களால் இழுக்கப்பட்டு வருகிறது. 3 பேரும் ஒரு வார காலம் குண்டிசா கோவிலில் இருந்து விட்டு ஜெகந்நாதர் கோவிலுக்கு திரும்புவர்.

இந்நிலையில், ரத யாத்திரையின் 2-வது நாளான நேற்று ரதங்களில் இருந்த 3 சாமிகளுக்கான திரைகளை அகற்றுவதற்காக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, இன்று அதிகாலை 4 மணியளவில் குண்டிசா கோவில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விவகாரத்தில் 2 காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து முதல்-மந்திரி மோகன் சரண் மஜி உத்தரவிட்டு உள்ளார். கூட்ட நெரிசல் சம்பவத்திற்காக அவர் இரங்கல் தெரிவித்து கொண்டார். இதனை தொடர்ந்து ஒடிசா டி.ஜி.பி. குரானியா கூறும்போது, விசாரணை நடந்து வருகிறது என்றார். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதன்படி, பூரி டி.சி.பி. பிஷ்ணு சரண் பதி மற்றும் மற்றொரு காவல் அதிகாரி அஜய் பதி ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து முதல்-மந்திரி மோகன் சரண் மஜி உத்தரவிட்டு உள்ளார். பூரி கலெக்டர் சித்தார்த் சங்கர் மற்றும் எஸ்.பி. வினீத் அகர்வால் ஆகியோரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

1 More update

Next Story