3 மந்திரிகள், எம்.பி. தேர்தலில் வெற்றி எதிரொலி: உத்தரபிரதேச மந்திரிசபை விரைவில் விஸ்தரிப்பு

உத்தரபிரதேசத்தில் 3 மந்திரிகள், எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், ஒரு மந்திரி நீக்கப்பட்டதாலும் விரைவில் மந்திரிசபை விஸ்தரிக்கப்பட உள்ளது.
3 மந்திரிகள், எம்.பி. தேர்தலில் வெற்றி எதிரொலி: உத்தரபிரதேச மந்திரிசபை விரைவில் விஸ்தரிப்பு
Published on

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 62 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது.

இந்த தேர்தலில் 4 மந்திரிகள் போட்டியிட்டனர். அவர்களில் 3 பேர் வெற்றி பெற்றனர். கால்நடை பராமரிப்பு துறை மந்திரி எஸ்.பி.சிங் பாகல், பெண்கள் நலத்துறை மந்திரி ரீட்டா பகுகுணா ஜோஷி, கதர் கிராம தொழில் வாரியத்துறை மந்திரி சத்யதேவ் பச்சோரி ஆகியோர் வெற்றி பெற்றனர். அதனால், அவர்கள் உ.பி. மந்திரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளனர்.

மேலும், கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியை சேர்ந்த ஓம்பிரகாஷ் ராஜ்பார், பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்ததால், அவர் மந்திரிசபையில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, 4 இடங்கள் காலியாக போகின்றன.

ஆகவே, இந்த காலியிடங்களை நிரப்பவும், கட்சி வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர்களுக்கு கவுரவம் அளிக்கவும் விரைவில் உத்தரபிரதேச மந்திரிசபை விஸ்தரிக்கப்பட உள்ளது.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் இதை சமீபத்தில் உறுதிப்படுத்தினார். மாநிலத்தின் நலனுக்காக மந்திரிசபையை விஸ்தரிப்போம் என்று அவர் கூறினார்.

தற்போது, இணை மந்திரிகளாக உள்ள மகேந்திர சிங், சுதந்திரதேவ் சிங் ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவி உயர்வு அளிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இவர்களில், மகேந்திர சிங், நாடாளுமன்ற தேர்தலில் அசாம் மாநில பொறுப்பாளராகவும், சுதந்திரதேவ் சிங், மத்தியபிரதேச பொறுப்பாளராகவும் பணியாற்றினர்.

அவர்களின் கடின உழைப்பால், இரு மாநிலங்களிலும் பா.ஜனதா அதிகமான தொகுதிகளை கைப்பற்றியது. அசாம் மாநிலத்தில் தேர்தல் முடிந்தவுடன், அமேதியிலும், கோரக்பூரிலும் பா.ஜனதா தலைவர் அமித் ஷாவின் ரோடு ஷோ பொறுப்பாளராக மகேந்திர சிங் நியமிக்கப்பட்டார். ஏராளமான கூட்டத்தை திரட்டி, அந்த ரோடு ஷோக்களை வெற்றிபெற வைத்தார்.

ஆகவே, அவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம் என்று பா.ஜனதா நிர்வாகிகள் உறுதிபட தெரிவிக்கின்றனர். பெரும்பாலான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தல் பணி அளிக்கப்பட்டு இருந்தது. அதில் திறம்பட பணியாற்றியவர்கள், மந்திரிசபையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அவர்கள் கூறினர்.

யோகி ஆதித்யநாத் மந்திரிசபை, கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் பதவி ஏற்றது. அதன்பிறகு மேற்கொள்ளப்படும் முதலாவது மந்திரிசபை மாற்றம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் 2022-ம் ஆண்டு நடக்க உள்ளது. அதை கருத்தில்கொண்டு, சாதி மற்றும் பிராந்தியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையில் மந்திரிசபை விஸ்தரிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com