

புதுடெல்லி,
கடற்படையின் 17 ஏ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஐ.என்.எஸ். டுனாகிரி போர்க்கப்பல், ஒரு நாசகார கப்பல் ஆகும். வழக்கமான நாசகார தாக்குதல் கப்பல்களை விட இது சிறிதானலும், கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் செயல்படுவதற்குப் போதுமான அளவு பெரியது.
மறைந்திருந்து தாக்கும் திறன் பெற்ற இந்த கப்பலை ரேடார் அல்லது சென்சார் மூலம் கண்டுபிடிப்பது கடினம்.
தரையில் இருந்து தரை இலக்கை தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகள், தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் நடுத்தர ஏவு கணை அமைப்பு, பன்னோக்கு கண்காணிப்பு சென்சார்கள், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டும் ரேடார், சோனார், எலக்ட்ரானிக் தளவாடங்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதங்களை கொண்டிருக்கும் இந்த கப்பல் கடல் பாதுகாப்புக்கு பெரும் பலம் சேர்க்கும்.
கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இயங்கும் இந்தப் பன்னோக்கு போர்க்கப்பல்கள் மரபுசார் மற்றும் மரபுசாரா அச்சுறுத்தல்கள் இரண்டையும் சமாளிக்கும் திறன் கொண்டவை என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிகப்பெரிய கண்காணிப்பு கப்பலான ஐ.என்.எஸ் சன்ஷோதக், நீலக்கடல் எல்லையை அங்குலம் அங்குலமாக அளந்து துல்லியமாக கண்காணிக்கும். நீரின் ஆழம், கடலடி அம்சங்கள், துறைமுகங்களை அணுகும் வழிகள், கப்பல் செலுத்தும் பாதைகள் மற்றும் கடலியல் தரவுகள் போன்றவற்றை ஆய்வு செய்து தகவல்களை வழங்கும்.
நீருக்கடியில் இயங்கும் தானியங்கி வாகனங்கள், தொலைவிலிருந்து இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் எதிரொலி ஒலிப்பான்கள் என இதில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள், நீரின் மேற்பரப்பிலிருந்தும் நீருக்கடியிலிருந்தும் தரவுகளைச் சேகரிக்க உதவுகின்றன. போர்க்கப்பல்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கான சூழல்களை ஆய்வு செய்து வழங்குவதுடன், பேரிடர் மீட்பு உள்ளிட்ட பொதுமக்களின் தேவைகளுக்கும் இந்த கண்காணிப்பு கப்பல் உதவும்.
பிரதமர் மோடியால் நேற்று படையில் சேர்க்கப்பட்ட 3 கப்பல்களில் மிகச்சிறியதான ஐ.என்.எஸ். அக்ரே, பணியில் மிகப்பெரிய பங்கை செய்கிறது. கடலோர பகுதிகளில் வரும் எதிரிகளின் நீர்மூழ்கிகளை வேட்டையாடுவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஆழ்கடலை விட கடலோரங்களில் நீர்மூழ்கிகளை கண்டறிவது கடினம். இரைச்சல், பரபரப்பு, ஒழுங்கற்ற அமைப்பு, மீன்பிடி படகுகள் போன்றவற்றால் அந்த பகுதிகளுக்கு வரும் எதிரிகளின் நீர்மூழ்கிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது. அக்ரே போன்ற நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களின் பயன்பாடு இங்குதான் அதிகம் தேவைப்படுகிறது.
அதற்கிணங்க கடற்கரை, துறைமுகங்கள், கடற்படை தளங்கள் மற்றும் முக்கியமான கடற்பகுதிகளில் நீர்மூழ்கிகளால் வரும் ஆபத்தை தடுக்கும் இந்த கப்பல்கள் இலகு ரக டோர் பெடோக்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள், சோனார் அமைப்புகளை கொண்டுள்ளன.