புதுச்சேரியில் 3 புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு

புதுச்சேரியில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
புதுச்சேரி
Published on

புதுச்சேரி,

3 புதிய அமைச்சர்கள்

புதுவை சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த மாதம் 13-ந் தேதி பதவியேற்றார். அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 3-ந் தேதி கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார்.

அப்போது புதிய அமைச்சர்களாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து. பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகிய 3 பேரை பரிந்துரை செய்து கடிதம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து புதிய அமைச்சர்களாக 3 பேரை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். பதவியேற்பு விழா நாளை (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் கவர்னர் கைலாஷ் நாதன் கலந்து கொண்டு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

பதவியேற்பு விழா

பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதே போல் புதிய அமைச்சர்களாக பதவியேற்ற உடன் அவர்கள் அன்றையை தினமே சட்டசபை வளாகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொள்வார்கள். இதற்காக சட்டசபை வளாகத்தில் அமைச்சர்களின் அறைகள் புனரமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.

புதிதாக 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்ற அன்றைய தினமே அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், தொடர்ந்து சபாநாயகர் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com