

ராய்ப்பூர்,
சத்தீஸ்காரில் போலீஸ் தலைமை காவலரின் மனைவி மற்றும் 11 வயது மகளை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனையும், மற்றொருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சூரஜ்பூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சத்தீஸ்கார் மாநிலம், சூரஜ்பூர் மாவட்டம், கோத்வாலி போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் தாலிப் ஷேக். இவருக்கு மெஹ்னாஜ் (வயது 35) என்ற மனைவியும் 11 வயதில் மகளும் இருந்தனர். கடந்த 2024 அக்டோபர் 13-ம் தேதி துர்கா சிலை விசர்ஜன ஊர்வல பாதுகாப்பு பணியில் தாலிப் ஷேக் ஈடுபட்டிருந்தார். அப்போது ரவுடி குல்தீப் சாஹூ, ஊர்வல பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார். அவரை பிடிக்க முயன்ற போலீசாரை காரை ஏற்றி கொல்ல முயன்றார்.
பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற சாஹூ, தலைமை காவலர் தாலிப் ஷேக்கின் வீட்டுக்குள் புகுந்தார். அப்போது அவரது மனைவியும் மகளும் மட்டும் வீட்டில் இருந்தனர். சாஹூவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மெஹ்னாஜை பாலியல் வன்கொடுமை செய்து கூர்மையான ஆயுதங்களால் அவரையும் அவரது மகளையும் கொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவம் சூரஜ்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆத்திரம் அடைந்த மக்கள் குல்தீப் சாஹூவின் வீட்டை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து, குல்தீப் சாஹூ மற்றும் அவரது கூட்டாளிகளான சந்திரகாந்த் சவுத்ரி, ரிங்கு, ஆர்யன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு சூரஜ்பூர் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் பிரகாஷ் வாரியல், முக்கிய குற்றவாளியான குல்தீப் சாஹூ, சந்திரகாந்த் சவுத்ரி, ரிங்கு ஆகிய 3 பேருக்கு துாக்கு தண்டனையும், ஆர்யனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.